
சர்க்கரை நோயாளிகளுக்கு தேனிலவு காலம் என்று ஒன்று உண்டு. சர்க்கரை நோய் தாமதமின்றி கண்டறியப்பட்ட ஆரம்ப கட்டத்தில் எந்தவிதமான மருந்துகளும் உட்கொள்ளாமல் வெறும் உணவக்கட்டுப்பாட்டிலேயே பல மாதங்கள் முதல் சில ஆண்டுகள்வரை ரத்த சர்க்கரை அளவு இயல்பான முறையில் வைத்துக்கொள்ள முடியும்.
இந்த மகிழ்ச்சியான நாட்கள் சர்க்கரை நோயாளிகளின் தேனிலவு காலம் என்று அழைக்கப்படுகிறது. உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கு சில நாட்கள் முதல் ஆறு மாதங்கள் வரையுமே இந்த தேனிலவு காலம் நீடிக்கிறது. இந்த காலகட்டத்தில் தங்கள் சர்க்கரை நோய் குணமாகிவிட்டதாக பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருப்பதால் முறையற்ற அல்லது தேவையற்ற உணவுகளை உட்கொண்டு தங்கள் சர்க்கரை அளவை அதிகப்படுத்திவிடுகின்றனர். இந்த தேனிலவு காலங்களில் உணவுக்கட்டுப்பாட்டுடன் ஆசனம், தியானம், மூச்சுப்பயிற்சி ஆகியவற்றை பின்பற்றினால் நெடுநாட்கள் மருந்துகளின்றி, சர்க்கரை நோயை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளலாம்.
திடீரென்று எந்தவித காரணமுமின்றி ஏற்படும் ஒருவகையான பயத்துடன் கூடிய பதட்டம் மற்றும் கவலையே ஆன்சைட்டி என்னும் மனநோயாகும். எப்பொழுதும் ஒருவித அபாயம் அல்லது பேரிடரை எதிர்நோக்கியவாறே ஆரோக்கியம், குடும்பம், பொருளாதாரம், வேலை, படிப்பு என்று பல விஷயங்களில் பதட்டத்துடன் வாழ்நாள் முழுவதும் சிலர் காணப்படுவர்.
எப்பொழுதும் ஒருவித கவலை மற்றும் மனஅழுத்தம் கொண்டிருத்தல், பிரச்னைகளை சந்திக்க பயப்படுதல், ஓய்வின்றி இருப்பது போன்ற உணர்வு, அடிக்கடி எரிச்சல்படுதல், தசைகள் அதிக இறுக்கத்துடன் அல்லது தளர்ச்சியுடன் காணப் படுதல், தலைவலி, எப்பொழுதும் வியர்வை, கவனச்சிதைவு, குமட்டல், உடற்சோர்வு, தூக்கமின்மை, கை, கால்களில் நடுக்கம், காரணமின்றி அழுதல், அடிக்கடி சிறுநீரோ மலமோ கழிக்கச் செய்தல் அல்லது கை கால்களைக் கட்டிக் கொண்டிருத்தல் ஆகியன மனப்பதட்ட நோயின் அறிகுறிகளாகும். இந்நோய் உடையவர்களுக்கு எதிர்மறையான எண்ணங்களுடன் இதயத்துடிப்பு அதிகரித்து காணப்படும்.
அவ்வப்பொழுது மார்பு வலியுடன் மூச்சுத்திணறலும் ஏற்பட்டு, ரத்த அழுத்தம் அதிகரிக்கும். செரிமான சக்தியும், நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து, வெளிறிய மற்றும் கண்பார்வை விரிந்த நிலையில் பரிதாபமாக காட்சியளிப்பர். மரணம் ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்துடன், வெறுமையான உணர்வுடன், அடிக்கடி கெட்ட கனவுகள் கண்டு, தூக்கமின்றி, இருப்புக்கொள்ளாமல் இருப்பர். பிறரை நேரிடையாக சந்தித்து பேச பயந்து அல்லது நடுக்கத்துடன் அல்லது பதட்டத்துடன் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ளாமல், தங்கள் பிரச்னைகளையே திரும்பத்திரும்ப கூறிக்கொண்டிருப்பது, மனப்பதட்ட நோயாளிகளின் குணங்களாகும்.
பரம்பரை, மரபணுக்களின் தன்மை, மூளையிலுள்ள நரம்பு கடத்திகளின் சமச்சீரின்மை, கடுமையான உடல்நல பாதிப்பு, அடிபடுதல், துக்கம், காதலித்தவர்கள் அல்லது பிரியமானவர்களை இழத்தல், விவாகரத்து, பணிமாற்றம், படிப்புச்சுமை, சாராயம், காபி, புகையிலை போன்றவற்றிற்கு அடிமையாதல் அல்லது திடீரென அந்தப் பழக்கத்தை நிறுத்துதல் ஆகியவற்றால் மனப்பதட்டம் அதிகரிக்கலாம்.
குழந்தைப்பருவம் அல்லது இளமைப்பருவத்திலிருந்தே மனப்பதட்டம் பலருக்கு தோன்றிவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆண்களைவிட பெண்களே மனப்பதட்டத்தால் பாதிக்கப்படுகின்றனர்.
மனப்பதட்டத்தைக் குறைக்கும் மருந்துகள், தூக்கத்தை உண்டாக்கும் மருந்துகள் ஆகியவற்றை மனநல மருத்துவரின் ஆலோசனைப்படி நீண்டநாட்கள் உட்கொள்ள வேண்டியது அவசியமாகும். இருந்தபோதிலும் தூக்கமின்மை, உடல்பருமன் அதிகரித்தல் மற்றும் பாலுறவு பலஹீனம் போன்றவை இந்த சிகிச்சையின் பக்கவிளைவுகளாக இருப்பதால் பெரும்பாலானோர் இதனை தவிர்க்க ஆரம்பித்துவிடுகின்றனர்.
மனநிலை, மன அழுத்தம், பயம், நடத்தை போன்ற 14 வகையான செயல்பாடுகள் மனப்பதட்டத்திற்கு காரணங்களாக இருப்பதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். காபி, டீ, கோலா, சாக்லேட் போன்றவற்றை தவிர்த்து, எளிய உடற்பயிற்சி, சமச்சரிவிகித உணவு, மனநல ஆலோசனை, தியானம், ஆசனம், மூச்சுப்பயிற்சி ஆகியவற்றை பின்பற்றினால் மனப்பதட்டத்திலிருந்து காத்துக்கொள்ளலாம். பல்வேறு வகையான காரணங்களால் ஏற்படும் மனப்பதட்டத்தை நீக்கி அதிகரித்த இதயத்துடிப்பை கட்டுப்படுத்தி, மன அமைதியைத்தரும் அற்புத மூலிகை வாலுழுவை. செலஸ்ட்ரஸ் பானிகுலேட்டஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட செலஸ்டேரிசியே குடும்பத்தைச் சார்ந்த மரங்களின் விதைகளே வாலுழுவை என்று அழைக்கப்படுகிறது. இதன் இலைகளிலுள்ள செலஸ்ட்ரின், பானிகுலோட்டின் போன்ற வேதிச்சத்துக்களும், நறுமண எண்ணெயும் மத்திய நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, இதயத்துடிப்பை கட்டுப்படுத்தி, மன அமைதியையும், சுகமான நித்திரையையும் உண்டாக்குகின்றன.
வாலுழுவை விதைகளை இளவறுப்பாக வறுத்து, லேசாக வெடித்ததும், புடைத்து, உள்ளிருக்கும் மென்மையான பகுதிகளை மட்டும் இடித்து, பொடித்து, சலித்து வைத்துக்கொள்ள வேண்டும். கால் முதல் அரை கிராம் தினமும் இரவு படுக்கும்பொழுது சூடான பாலில் சாப்பிட்டுவர மனப்பதட்டம் நீங்கும்.
வாலுழுவை, சங்குபுஷ்பம், பிரம்மி, அசுவகந்தா, சடாமாஞ்சில் ஆகியவற்றை உலர்த்தி, பொடித்து சலித்து வைத்துக்கொள்ள வேண்டும். 1 முதல் 2 கிராம் தினமும் இரண்டு வேளை பாலுடன் கலந்து சாப்பிட மனப்பதட்டம் நீங்கும். சித்தா, ஆயுர்வேதா மருந்துக்கடைகளில் கிடைக்கும் பிரேவோபால் என்னும் கேப்சுலில் வாலுழுவை சேர்க்கப்படகிறது. இதனை 1 கேப்சுல் இரவு படுக்கும்பொழுது தினமும் சாப்பிட்டுவர மனப்பதட்டம் நீங்கும்.
- டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை