வெள்ளி, 30 செப்டம்பர், 2011

மூலிகை மருத்துவம் – மயக்கமா… கலக்கமா.. மனதிலே பதட்டமா


சர்க்கரை நோயாளிகளுக்கு தேனிலவு காலம் என்று ஒன்று உண்டு. சர்க்கரை நோய் தாமதமின்றி கண்டறியப்பட்ட ஆரம்ப கட்டத்தில் எந்தவிதமான மருந்துகளும் உட்கொள்ளாமல் வெறும் உணவக்கட்டுப்பாட்டிலேயே பல மாதங்கள் முதல் சில ஆண்டுகள்வரை ரத்த சர்க்கரை அளவு இயல்பான முறையில் வைத்துக்கொள்ள முடியும்.
இந்த மகிழ்ச்சியான நாட்கள் சர்க்கரை நோயாளிகளின் தேனிலவு காலம் என்று அழைக்கப்படுகிறது. உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கு சில நாட்கள் முதல் ஆறு மாதங்கள் வரையுமே இந்த தேனிலவு காலம் நீடிக்கிறது. இந்த காலகட்டத்தில் தங்கள் சர்க்கரை நோய் குணமாகிவிட்டதாக பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருப்பதால் முறையற்ற அல்லது தேவையற்ற உணவுகளை உட்கொண்டு தங்கள் சர்க்கரை அளவை அதிகப்படுத்திவிடுகின்றனர். இந்த தேனிலவு காலங்களில் உணவுக்கட்டுப்பாட்டுடன் ஆசனம், தியானம், மூச்சுப்பயிற்சி ஆகியவற்றை பின்பற்றினால் நெடுநாட்கள் மருந்துகளின்றி, சர்க்கரை நோயை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளலாம்.
திடீரென்று எந்தவித காரணமுமின்றி ஏற்படும் ஒருவகையான பயத்துடன் கூடிய பதட்டம் மற்றும் கவலையே ஆன்சைட்டி என்னும் மனநோயாகும். எப்பொழுதும் ஒருவித அபாயம் அல்லது பேரிடரை எதிர்நோக்கியவாறே ஆரோக்கியம், குடும்பம், பொருளாதாரம், வேலை, படிப்பு என்று பல விஷயங்களில் பதட்டத்துடன் வாழ்நாள் முழுவதும் சிலர் காணப்படுவர்.
எப்பொழுதும் ஒருவித கவலை மற்றும் மனஅழுத்தம் கொண்டிருத்தல், பிரச்னைகளை சந்திக்க பயப்படுதல், ஓய்வின்றி இருப்பது போன்ற உணர்வு, அடிக்கடி எரிச்சல்படுதல், தசைகள் அதிக இறுக்கத்துடன் அல்லது தளர்ச்சியுடன் காணப் படுதல், தலைவலி, எப்பொழுதும் வியர்வை, கவனச்சிதைவு, குமட்டல், உடற்சோர்வு, தூக்கமின்மை, கை, கால்களில் நடுக்கம், காரணமின்றி அழுதல், அடிக்கடி சிறுநீரோ மலமோ கழிக்கச் செய்தல் அல்லது கை கால்களைக் கட்டிக் கொண்டிருத்தல் ஆகியன மனப்பதட்ட நோயின் அறிகுறிகளாகும். இந்நோய் உடையவர்களுக்கு எதிர்மறையான எண்ணங்களுடன் இதயத்துடிப்பு அதிகரித்து காணப்படும்.
அவ்வப்பொழுது மார்பு வலியுடன் மூச்சுத்திணறலும் ஏற்பட்டு, ரத்த அழுத்தம் அதிகரிக்கும். செரிமான சக்தியும், நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து, வெளிறிய மற்றும் கண்பார்வை விரிந்த நிலையில் பரிதாபமாக காட்சியளிப்பர். மரணம் ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்துடன், வெறுமையான உணர்வுடன், அடிக்கடி கெட்ட கனவுகள் கண்டு, தூக்கமின்றி, இருப்புக்கொள்ளாமல் இருப்பர். பிறரை நேரிடையாக சந்தித்து பேச பயந்து அல்லது நடுக்கத்துடன் அல்லது பதட்டத்துடன் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ளாமல், தங்கள் பிரச்னைகளையே திரும்பத்திரும்ப கூறிக்கொண்டிருப்பது, மனப்பதட்ட நோயாளிகளின் குணங்களாகும்.
பரம்பரை, மரபணுக்களின் தன்மை, மூளையிலுள்ள நரம்பு கடத்திகளின் சமச்சீரின்மை, கடுமையான உடல்நல பாதிப்பு, அடிபடுதல், துக்கம், காதலித்தவர்கள் அல்லது பிரியமானவர்களை இழத்தல், விவாகரத்து, பணிமாற்றம், படிப்புச்சுமை, சாராயம், காபி, புகையிலை போன்றவற்றிற்கு அடிமையாதல் அல்லது திடீரென அந்தப் பழக்கத்தை நிறுத்துதல் ஆகியவற்றால் மனப்பதட்டம் அதிகரிக்கலாம்.
குழந்தைப்பருவம் அல்லது இளமைப்பருவத்திலிருந்தே மனப்பதட்டம் பலருக்கு தோன்றிவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆண்களைவிட பெண்களே மனப்பதட்டத்தால் பாதிக்கப்படுகின்றனர்.
மனப்பதட்டத்தைக் குறைக்கும் மருந்துகள், தூக்கத்தை உண்டாக்கும் மருந்துகள் ஆகியவற்றை மனநல மருத்துவரின் ஆலோசனைப்படி நீண்டநாட்கள் உட்கொள்ள வேண்டியது அவசியமாகும். இருந்தபோதிலும் தூக்கமின்மை, உடல்பருமன் அதிகரித்தல் மற்றும் பாலுறவு பலஹீனம் போன்றவை இந்த சிகிச்சையின் பக்கவிளைவுகளாக இருப்பதால் பெரும்பாலானோர் இதனை தவிர்க்க ஆரம்பித்துவிடுகின்றனர்.
மனநிலை, மன அழுத்தம், பயம், நடத்தை போன்ற 14 வகையான செயல்பாடுகள் மனப்பதட்டத்திற்கு காரணங்களாக இருப்பதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். காபி, டீ, கோலா, சாக்லேட் போன்றவற்றை தவிர்த்து, எளிய உடற்பயிற்சி, சமச்சரிவிகித உணவு, மனநல ஆலோசனை, தியானம், ஆசனம், மூச்சுப்பயிற்சி ஆகியவற்றை பின்பற்றினால் மனப்பதட்டத்திலிருந்து காத்துக்கொள்ளலாம். பல்வேறு வகையான காரணங்களால் ஏற்படும் மனப்பதட்டத்தை நீக்கி அதிகரித்த இதயத்துடிப்பை கட்டுப்படுத்தி, மன அமைதியைத்தரும் அற்புத மூலிகை வாலுழுவை. செலஸ்ட்ரஸ் பானிகுலேட்டஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட செலஸ்டேரிசியே குடும்பத்தைச் சார்ந்த மரங்களின் விதைகளே வாலுழுவை என்று அழைக்கப்படுகிறது. இதன் இலைகளிலுள்ள செலஸ்ட்ரின், பானிகுலோட்டின் போன்ற வேதிச்சத்துக்களும், நறுமண எண்ணெயும் மத்திய நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, இதயத்துடிப்பை கட்டுப்படுத்தி, மன அமைதியையும், சுகமான நித்திரையையும் உண்டாக்குகின்றன.
வாலுழுவை விதைகளை இளவறுப்பாக வறுத்து, லேசாக வெடித்ததும், புடைத்து, உள்ளிருக்கும் மென்மையான பகுதிகளை மட்டும் இடித்து, பொடித்து, சலித்து வைத்துக்கொள்ள வேண்டும். கால் முதல் அரை கிராம் தினமும் இரவு படுக்கும்பொழுது சூடான பாலில் சாப்பிட்டுவர மனப்பதட்டம் நீங்கும்.
வாலுழுவை, சங்குபுஷ்பம், பிரம்மி, அசுவகந்தா, சடாமாஞ்சில் ஆகியவற்றை உலர்த்தி, பொடித்து சலித்து வைத்துக்கொள்ள வேண்டும். 1 முதல் 2 கிராம் தினமும் இரண்டு வேளை பாலுடன் கலந்து சாப்பிட மனப்பதட்டம் நீங்கும். சித்தா, ஆயுர்வேதா மருந்துக்கடைகளில் கிடைக்கும் பிரேவோபால் என்னும் கேப்சுலில் வாலுழுவை சேர்க்கப்படகிறது. இதனை 1 கேப்சுல் இரவு படுக்கும்பொழுது தினமும் சாப்பிட்டுவர மனப்பதட்டம் நீங்கும்.
- டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

சீனாவின் அசிங்கங்கள்

ஒரு தேசம் பொருளாதாரத்தில் மட்டும் வளர்ந்தால் போதுமா ? அந்த நாட்டின் மக்களின் உடல்நலமும், மனநலமும் பேணப்படல் வேண்டாமா? அந்த மக்களைத் தாங்கி நிற்கும் இயற்கையின் வளம் காக்கப்பட வேண்டாமா? கடந்த ஆண்டு மட்டும் சீனாவில் இரண்டாயிரம் தொழிற்சாலைகள் சுகாதாரக் கோடு மிக்கது, தொழிலாளர் உடல்நலக் கேடு தருகிறது எனக் கூறி மூடப்பட்டது. இருந்தாலும் உலகில் சகல உற்பத்தியில் முன்னணியில் போகும் வேகப் போட்டியில், சீனாவின் அனைத்து நகரங்களும் அமில மழையால் நனைந்துக் கிடக்கிறது. Green houses வாயுக்களை வெளியே தள்ளுவதில் அமெரிக்காவையும் முந்திக் கொண்டு சென்றுள்ளது சீனம். நம் இந்தியா மட்டும் என்ன இயற்கை இரட்சக தேசமா? நிச்சயமாக இல்லை ! அல் ஜழீரா தொலைக்காட்ச்சியில் வெளியான இந்நிகழ்ச்சில் இயற்கையை சீரழித்து பொருளாதார வளர்ச்சியடைய சீன பெரும்நாடு எவ்வளவு கேவலங்களை செய்துள்ளது என்பதை விரிவாக ஆராய்கிறது.

உஷார்! பேஸ்புக் விவரங்களைத் திருடும் பாலியல் உறவுத்தளங்கள்

நீங்கள் வலையில் மேய்ந்து கொண்டிருக்கும் போது பாலியல் டேட்டின் தளத்தில் அல்லது அதன் விளம்பரத்தில் உங்களது புகைப்படத்தைப் பார்த்தால் எப்படி இருக்கும். நீ என்ன லூசா ? என்று என்னைப் பார்த்து நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் இதை மறுக்க முடியாத உண்மை. பேஸ்புக்கில் இருந்து இதுவரை 250,000 உறுப்பினர்களின் விவரங்களை டேட்டிங்க தளங்கள் திருடி உள்ள செய்தி வெளியாகி உள்ளது.
லவ்லி பேசஸ் என்னும் இணையதளம் சமீபத்தில் வெளியானது. இதில் இப்படியாக பேஸ்புக் பக்கங்களில் இருந்து பல்லாயிரக் கணக்கானோரின் விவரங்களைத் திருடி வெளியிட்டு இருந்தனர்.
இதனை பேஸ்புக் நிறுவனத்தால் தடுக்கவே முடியாது என்பது இன்னொரு வேடிக்கையான விசயமாகும்.
உறுப்பினர்களின் விவரங்களைத் திருடுவது எமதுக் கொள்கைகளின் மீறலாலும் ” என பேஸ்புக்கின் நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான பேரி சச்னிட் கூறினார். இவ்வாறு அத்துமீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இருந்தாலும் இப்படி இணையத்தில் இருந்து உறுப்பினர்களின் விவரங்களை சுடுபவர்களை முற்றாக ஒன்றும் செய்ய முடியாத நிலையே உண்மையாக இருக்கிறது. காரணம் இவ்விவரங்கள் அனைத்தும் எதோ ஒருவகையில் பொது உடைமையாக இருப்பதே !
இன்னொரு வேடிக்கையான சங்கதி என்னவென்றால், பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் 2003-களில் ஹார்வார்ட்டில் படித்துக் கொண்டிருக்கும் போது அந்தப் பள்ளியில் தனது தோழர்களின் புகைப்படங்களை பள்ளி சேர்வரில் பகிரவும், அதனை அனைவரும் பார்க்கக் கூடிய பேஸ்மாஹ் என்னும் நுட்பத்தைப் புகுத்தினார். அது பின்னர், பள்ளியில் இருக்கும் அனைத்து ஆண்/பெண் புகைப்படங்களை உருவி வெளியிட்டு அதில் எது சிறந்தது என மதிப்பீடு போடும் தளமாக மாறியது, பிற்காலத்தில் அதுதான் பேஸ்புக்காக உருமாறி வந்தது.
இப்போது சொல்லுங்கள் ! பேஸ்புக்கில் இருந்து திருடுபவர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை சொல்ல இந்த சம்பவங்கள் போதாதா ?
மார்க் உன்னிடம் இருந்து தான் இதைக் ( திருட்டைக் ) கற்றுக் கொண்டோம் ” என்பார்கள்.
பேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பவர்களும், அல்லது உங்களது வயதுநிரம்பாத பிள்ளைகள் கணக்கு வைத்திருந்தாலும், கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது. பின்னாளில் வரன் தேடும் தளங்களில் மட்டுமில்லாமல் டேட்டிங்க் தளங்களிலும் உங்கள் புகைப்படங்கள் வரலாம்.

108 திவ்ய தேசங்கள்


நண்பர்கள் தேர்ந்தெடுப்பதைமரபணு தான் தீர்மானிக்கிறது


லண்டன்:தனக்கு ஏற்ற நண்பராக யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பதை ஒருவரது மரபணு தான் தீர்மானிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிந்துள்ளது.மனிதர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட குணநலன்கள், தனிப்பட்ட பழக்க வழக்கங்களை கொண்டுள்ளனர். அவர்களின் குணநலன்கள், பழக்க வழக்கங்கள் மற்றும் ஒழுக்கம் சார்ந்த இயல்புகளை அவனது மரபணு தீர்மானிப்பதாக, மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அதே போன்று, ஒருவர் தனக்கு ஏற்ற நண்பர்கள் யார் என்பதை தேர்வு செய்ய வேண்டும் என்பதை, அவரது மரபணு தான் தீர்மானிப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மரபியல் பண்பு அல்லது மரபணு வகைகளின்படி, குறிப்பிட்ட ஆறு மரபணுக்கள், தங்களுக்கு ஏற்ற நண்பன் யார் என்பதை தீர்மானிப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இளம் வயதில், எதிர் பாலினத்தவரிடம் ஏற்படும் ஆர்வம் அல்லது இனக்கவர்ச்சியைப் போன்றும், இனம் இனத்தோடு சேரும் என்பது போன்றும் இந்த மரபணுக்கள், தங்களுக்கு ஏற்ற நண்பர்கள் இவர்தான் என்று அடையாளம் காணுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகை உலுக்கும் போராட்டங்கள்: ஊழல் ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ந்து எழும் மக்கள்

இந்த பூமிப் பந்தின் கடந்த கால, நிகழ்கால நிகழ்வுகள் ஒவ்வொன்றுமே பரபரப்பும், திருப்பங்களும் நிறைந்தவை. இதில் சில நிகழ்வுகள் மட்டும் சரித்திரமாகி விடுவதுண்டு. குறிப்பாக, மக்கள் நடத்தும் மிகப்பெரிய புரட்சியும், போராட்டங்களும் சரித்திரத்தில் நிலையான இடத்தை பிடித்து விடும். அப்படிப்பட்ட நிகழ்வுகள், தற்போது பல்வேறு நாடுகளிலும் தென்பட துவங்கியுள்ளன.


விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, வறுமை போன்ற அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல், மக்கள் கடுமையாக பாதிக்கப்படும் போது, அதை நிறைவேற்றி தர வேண்டியது ஆளும் வர்க்கத்தின் கடமை. பாதிக்கப்பட்ட மக்களின் கூக்குரலை கண்டுகொள்ளாமல், ஆடம்பர சுக வாழ்வு நடத்துவதிலேயே, ஆளும் வர்க்கத்தினர் குறியாக இருந்தால், அடக்கி வைக்கப்பட்ட மக்கள், என்றாவது ஒரு நாள் பொங்கி எழுவர். அது, மிகப்பெரிய போராட்டமாக வெடிக்கும்; மறுமலர்ச்சி பிறக்கும். மக்களை அடக்கி வைத்திருந்த ஆட்சியாளர்கள் காணாமல் போய் விடுவர். மக்களின் வரிப் பணத்தை கொள்ளையடித்து, ஊழலில் கொழுத்து இருக்கும் ஆட்சியாளர்களுக்கும் இது தான் நிலைமை.


மீண்டும் துவங்கிய போராட்டம்: கடந்த காலங்களில் பல்வேறு நாடுகளிலும், அரசுக்கு எதிராக மக்கள் வெகுண்டெழுந்து, போராட்டங்களை நடத்தியுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக, இதுபோன்ற போராட்டங்கள் குறைந்திருந்தன. ஆனால், சமீபகாலமாக, உலகின் பல்வேறு நாடுகளில், ஆட்சியாளர்களின் கொடுமையை எதிர்த்து, மீண்டும் மக்கள் கிளர்ந்தெழுந்து போராடத் துவங்கி விட்டனர். வட ஆப்ரிக்காவில் உள்ள டுனீசியா, மவுரிடானியா, அல்ஜீரியா, எகிப்து, சூடான் ஆகியவற்றிலும், அரேபிய தீபகற்பத்தில் உள்ள ஏமனிலும், மத்திய கிழக்கு நாடான ஜோர்டானிலும் இந்த போராட்டங்கள் அதிகரித்துள்ளன. இந்த போராட்டங்களின் போது, ஆச்சர்யப்படும் வகையில், நம் நாட்டில் நிகழ்வதைப் போன்ற தீக்குளிப்பு சம்பவங்களும் நடக்கின்றன.


டுனீசியாவில் பிள்ளையார் சுழி: தற்போது நடக்கும் போராட்டங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டது டுனீசியா நாடு தான். ஒரு மாதத்துக்கும் மேலாகவே, டுனீசியாவில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். வேலையின்மை, வறுமை போன்ற காரணங்களை முன்வைத்து, அதிபர் அல்-அபிதின் பின் அலி பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த டிசம்பர் 17ம் தேதி, முகமது பவுஜிஜி என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. போராட்டத்தை சமாளிக்க முடியாமல், அதிபர் அபிதின் பின் அலி, சவுதி அரேபியாவுக்கு ஓட்டம் பிடித்தார்.


மவுரிடானியா: மவுரிடானியா நாட்டில் பழங்குடி மக்கள் கணிசமாக வசிக்கின்றனர். தங்களின் அடிப்படை தேவைகளை அரசு நிறைவேற்றாதது குறித்த கோபம், அவர்களிடையே, கனன்று கொண்டிருந்தது. இந்த கோபம், கடந்த மாதம் 17ம் தேதி வெளிப்பட்டது. யாகூப் என்பவர், பழங்குடியினரின் தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதை தொடர்ந்து, பழங்குடி மக்களின் போராட்டம் அங்கு தீவிரமடைந்துள்ளது.


அல்ஜீரியா: அல்ஜீரியாவில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை, பல மடங்கு அதிகரித்ததன் காரணமாக, மக்கள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினர். கடந்த மாதம், அல்ஜீரியாவின் போராட்ட மாதம் என்றே கூறலாம். அந்த அளவுக்கு எங்கு பார்த்தாலும், மக்கள் திரண்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டங்களின் போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே பெரும் கலவரம் மூண்டது. கலவரத்தில் பலர் இறந்தனர். இறுதியில் மக்கள் போராட்டத்துக்கு அரசு பணிந்தது. சில உணவுப் பொருட்களின் விலையை குறைப்பதாக அரசு அறிவித்ததை அடுத்து, பொதுமக்களின் போராட்டம் தற்காலிகமாக ஓய்ந்துள்ளது.


சூடான்: சூடானில் பெட்ரோல் மற்றும் சர்க்கரை ஆகியவற்றுக்கு வழங்கப்பட்ட மானியத்தை அரசு ரத்து செய்ததால், மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். கெஜிரா மாகாணத்தில், மாணவர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே, சண்டை மூண்டது. இதில் பலர் காயமடைந்தனர். இது மட்டுமல்லாது, நாட்டை வடக்கு மற்றும் தெற்கு என, இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற அந்நாட்டு மக்களின் நீண்ட கால போராட்டமும் தற்போது தீவிரமடைந்துள்ளது. இதற்காக நடத்தப்பட்ட பொது ஓட்டெடுப்பில், நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என, 99 சதவீத மக்கள் ஓட்டளித்துள்ளனர். இதனால், சூடானில் பதட்டம் தொடர்கிறது.


ஜோர்டான்: இங்கு சர்க்கரை, எரிபொருள், அரிசி போன்றவற்றின் விலை, கட்டுக்கடங்காமல் அதிகரித்ததால், அதிருப்தி அடைந்த மக்கள், போராட்டத்தில் இறங்கினர். பிரதமர் சமீர் அல் ரிபாயை எதிர்த்து, தெற்கு மாகாணமான கராக்கில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அம்மான், இர்பிட், திபான் ஆகிய இடங்களிலும் போராட்டம் வெடித்தது.


ஏமன்: டுனீசியா அதிபர் நாட்டை விட்டு ஓடியதை தொடர்ந்து, ஏமனிலும் அதிபர், அலி அப்துல்லா சலேவுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. டவாகுல் கர்மான் என்ற பெண், போராட்டத்துக்கு தலைமையேற்றார். மொபைல் போன்களில் அரசுக்கு எதிராக குறுந்தகவல்கள் பறந்தன. நாளுக்கு நாள் போராட்டம் வலுத்ததை அடுத்து, கடந்த மாத இறுதியில் கர்மான் கைது செய்யப்பட்டார். இவரது கைதால், போராட்டம் அதிகரித்ததே தவிர குறையவில்லை. அமைதியாக போராடி கொண்டிருந்த மக்கள், தற்போது வீதிக்கு வந்து போராட துவங்கி விட்டனர்.


எகிப்து: தற்போது எகிப்தில் நடக்கும் மாபெரும் மக்கள் போராட்டம், உலகம் முழுவதும் உள்ள மக்களின் கவனத்தை, எகிப்தை நோக்கி திருப்பியுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக அதிபர் பதவியில் நங்கூரம் போட்டு, விடாப்பிடியாக அமர்ந்திருக்கும் ஹோஸ்னி முபாரக் பதவிக்கு ஆபத்து வந்துள்ளது. வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு போன்றவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், கடந்த 10 நாட்களாக கெய்ரோ, அலெக்சாண்டிரியா ஆகிய நகரங்களில், வரலாறு காணாத அளவுக்கு போராட்டம் நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன், எகிப்தில் உள்ள தாரிர் சதுக்கத்தில் மூன்று லட்சம் மக்கள் திரண்டு, பெரும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை தலைமையேற்று நடத்தி கொண்டிருப்பவர் எல்பரேடி. மக்களின் தொடர் போராட்டங்களால் முபாரக், சற்று இறங்கி வந்துள்ளார். "வரும் செப்டம்பர் வரையிலாவது பதவியில் இருக்கிறேன். அதற்கு பின் நடக்கும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்' என, கெஞ்ச துவங்கியுள்ளார். ஆனால், சுனாமி போல் எழுந்துள்ள மக்களின் கோபத்துக்கு முன், அவரது கெஞ்சல் எடுபடவில்லை. "முதலில் பதவியை விட்டு இறங்கு; அதற்கு அப்புறம் நடப்பதை நாங்கள் பார்த்து கொள்கிறோம்' என கொந்தளிக்கின்றனர். உலகின் பல்வேறு நாடுகளிலும் இதுபோன்ற போராட்டங்கள் பரவி வருவதால், ஊழல் மலிந்த, நிர்வாக திறமையற்ற நாடுகளின் ஆட்சியாளர்கள் பெரும் கலக்கத்துக்கு ஆளாகியுள்ளனர்.


பிரெஞ்சு புரட்சி: உலகின் பல்வேறு நாடுகளிலும், பல்வேறு கால கட்டங்களில் இதுபோன்ற மக்கள் புரட்சி வெடித்த வரலாறு உண்டு. இதற்கு முன்னோடியாக அமைந்தது, 1789ல் நடந்த பிரெஞ்சு புரட்சி. மக்களின் நலனை புறக்கணித்து, அமெரிக்காவுக்கு ஆதவாக போரிடுவதற்கு தனது படைகளை அனுப்பி வைத்தான், மன்னன் பதினாறாம் லூயி. இதனால், பிரான்சு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியது. ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் மக்கள் திண்டாடினர். இதை பற்றி சற்றும் கவலைப்படாத மன்னன், வரியை மேலும் அதிகரித்து, மக்களின் வயிற்றெரிச்சலையும், கோபத்தையும் ஒரு சேர சம்பாதித்துக் கொண்டான். மக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா? இதற்கு மேலும் தாங்க முடியாது என கருதிய பிரான்சு மக்கள், பாரீஸ் நகர வீதிகளில் அலையலையாக திரண்டனர். கடல் அலை போன்ற மக்களின் அலைக்கு, அங்கிருந்த பாஸ்டைல் சிறையால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இறுதியில் அச்சிறை தகர்க்கப்பட்டது. பிரான்சு மக்கள் செய்த, இந்த மாபெரும் புரட்சி, இதன்பின் ஐரோப்பிய நாடுகளில் பல புரட்சிகள் ஏற்படுவதற்கு முன்னோடியாக அமைந்தது.

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

சும்மா :-)


சின்னப் பையன் சார் எனக்கு விரல் வெச்சா கூட கடிக்கத் தெரியாது

காதலுக்கு மரியாதை


நடந்து சென்றேன்
பார்க்காமல் போனாள்.
சைக்கிளில் சென்றேன்
ஹாய் என்றாள்.
பைக்கில் சென்றேன்
அன்பே என்றாள்.
காரில் சென்றேன்
அத்தான் என்றாள்.
இவை அத்தனையும்
வாடகைக்கு என்றேன்
போடா என்றாள்.

என்னுள்(நீ)......


நீ....
என்னிடம்
எதை வேண்டுமானாலும்
கேள்....
என்னுள்ளிருக்கும்
உன்னை தவிர

கடல்நீர்



எத்தனை மீன்கள்
அழுதனவோ?
இத்தனை உப்பு... கடல்நீர்.


சூரியனில் இடம் பிடிக்க தயக்கமில்லை!
அந்த சூடுகளை கூட தாங்கி விடுவேன்.
ஆனால் உன் மனதில் அழியா இடம் பிடிக்க
என் மனதினை மெழுகாய் அல்லவா உருக்கினேன்.

நன்றி, கடவுளே

தெரிந்தவனுக்கு அன்று திருமணம்.
பரிசாய் ரூபாய் ஐநூறை
உரிய தோர் 'உறையில்'
பேரின்ப மோடு கொடுத்தான்,,
வாரி வழங்கும் உணர்வில்.

சிற்றுண்டி முடித்து வெளிவந்து
சற்றே சட்டைப்பை தொட்டபோது
உற்ற 'மொய்ப்பணம்' இங்கே..
வெற்று உறையோ அங்கே
முற்றிலும் அதிர்ச்சியில் அவன்.

மறதியில் இப்படியோர் செயல்..
பிறந்தது மனதில் புயல்.
சிறப்பு குன்றிய விதத்தை
மறவாது மாற்றும் முயற்சியில்
விறுவிறுப்பாய் உள்ளே சென்றபோது..

மணமகன் இவனை அழைத்து,
பணமோ, பொருளோ தங்களுக்கு
வேண்டாமென உரைத்து, இனிய
நண்பனது ஆசியன்பு போதுமென்றான்.
மீண்ட வெற்றுஉறையோ இவன்கையில்.. ஆச்சரியம்

வியாழன், 3 பிப்ரவரி, 2011

உலகைக்காக்க.......ஒரு வழி! ஒரே வழி!


உலகைக்காக்க.......ஒரு வழி! ஒரே வழி!




உடலின் வெப்பம் உயர்ந்தால்…அஃது
உண்மையில் காய்ச்சலின் அறிகுறி!
உரிய மருந்துகள் உடனே அருந்தினால்
உயரும் காய்ச்சல் குறையும் – மறையும்

மானிடக் காய்ச்சலுக்கு மருந்து அருந்துவோரே!- நீங்கள்
மண்ணின் காய்ச்சலுக்கு மருந்து அளித்தீரா?

உலகின் வெப்பம் உயர்ந்து கொண்டிருப்பதை
உடனே தடுக்காவிட்டால்............
உரிய சிகிச்சை அளித்துக் காய்ச்சலின்
உயர்வை நிறுத்தா விட்டால்............

காய்ச்சலின் முடிவே
மண்ணின் முடிவாய் மாறிடக் கூடும்
மண்ணின் மரணம் மனிதக் குலத்தின்
மரணப் பிரளயம் ஆகும்!

பன்றிக் காய்ச்சல்
பறவைக் காய்ச்சல்
டெங்குக் காய்ச்சல்
மலேரியா காய்ச்சல்
போன்ற காய்ச்சல் அனைத்திலும்
பொல்லாக் காய்ச்சல் புவியின் காய்ச்சல்
என்பதே உண்மை! இந்தக் காய்ச்சலைக்
குறைப்பதே உயிர்க்கும் அனைத்திற்கும் செய்யும்
நன்மை!
மண்ணின் காய்ச்சலைக் குறைத்திட
மரம் வளர்ப்பு என்னும் மருந்தளியுங்கள்! அது முதல் உதவி
மட்டுமன்று முதன்மையான உதவியுமாகும்!

மண்ணில் வளர்ந்திருக்கும் மரங்கள்! அவை
மரங்கள் அல்ல! மணமகள் பெற்ற வரங்கள்!
அந்த வரங்களை அகற்றத் தொடங்கினால்
கவசக் குண்டலம் இழந்த கர்ணனைப்
போல, ஆகும் புவியின் நிலமை!
மணப்பெண்- மண் எனும் பெண்ணின்
தோழியர் ஆகாயம், காற்று, நீர் ஆகியோர்
அந்தத் தோழியரை நாம் கலங்கப்படுத்தினால்
தாரணி நங்கை அதனைத் தாங்கிக் கொள்ளாமல்
உள்ளம் கொதிப்பாள்! வெப்பம் மிக உயர்ந்திடுவாள்!
அந்த வெப்பத்தால் பூமியின் ஆருயிர் நீங்குகின்ற
அவலமும் நேரிடலாம்!

ஓடும் பாம்பினை ஓடி நாம் அடித்தால்
ஓடிய பாம்பு உடனே திரும்பித்
தாக்கிய நம்மைச் சீறிக் கடிக்கும்!
கல்லால் நாயை அடித்தால், அந்த நாய்
பல்லால் கடிக்கப் பாய்ந்து சினந்திடும்!
அதுபோல்,

இயற்கையை, மானிடம் அறிவியல் என்னும் தன்
மூன்றாவது கையால் தாக்கத் தாக்க, பதிலுக்கு
இயற்கையும் சீறித் தன் எதிர்பைக் காட்டுதல்
இயற்கையே யாகும்!

இயற்கை சீற்றம் கொண்டு எழுந்தால்
மனித வாழ்க்கை மடங்கி, முடங்கி, உடைந்து போகும்!
இதுவரை இயற்கையைச் சீண்டிச் சீண்டிச்
சீற்றப்படுத்தியது போதும் இனியாவது
சீற்றப்படுத்தாமல் - அமைதி வழியில்
ஆற்றுப்படுத்துவோம்.

வடதுருவம்- தென்துருவம் என்னும்
இருபெரும் பாசறைகளில்
வெள்ளைக்கட்டியாய்
உறங்கிக் கொண்டிருக்கும் தண்ணீர்ப்படை வீரர்களை
புவி வெப்பப் போர்ப்பறையை முழக்கி
எழுப்பி விடாதீர்!
உறங்கும் வீரர்கள் உருகி எழுந்தால்.......
அந்தப்படையின் ஆக்கிரமிப்பு
எதுவரை நடக்குமோ- என்னென்ன நடக்குமோ?

நாம் வாழும் பூமி பந்தின்
முக்கால் பகுதி
தண்ணீர்ப்படை வீரர் தம் ஆக்கிரமிப்பில்
தானே உள்ளது?
மேலும் அவர்கள் சீறி எழுந்தால்
மானிடர் நாம் வாழும்
கால்பகுதியிலும் கால் ஊன்றிவிடுவார்கள் !
என்பதால் எச்சரிக்கின்றேன்!
பஞ்சுப் பொதிகளாய்- வெண்ணைக் கட்டியாய்
ஆழ்ந்து உறங்கும்,
நீர் வீரர்களை, மானிடரே! நீர் எழுப்பி விடாதீர்!
அவர்கள் உறங்கும் வரையில் தான், கடல் மட்டமும் எல்லைக்கோடும்
மாறாதிருக்கும்
எல்லைப்போரில் அவர்கள் ஈடுபடாது உறங்க
இயற்கை வாழ்வு எனும் தாலாட்டை மானிட இனம்
உரங்க இசைப்பது ஒரு வழி! அஃது ஒரே வழி!

எதனை நிறுத்தினாலும் இயற்கை வாழ்வுத் தாலாட்டை மட்டும்
நிறுத்தாமல் பாடத் தொடங்குங்கள்- பாடிக் கொண்டே இருங்கள்- அது தான்
மானிடத்தை மகிழ்வுடன் பொங்கச் செய்யும்!
இயற்கைச் சீற்றத்தை மங்கச் செய்யும்!